ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்துக்கு முதல்நாள் அறிவிக்கப்படும், குடியரசுத்தலைவரின் 'பத்ம' விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

விருது பெறுவோர் பட்டியலில் தகுதியான பலர் இடம்பெற்றிருந்தபோதிலும், மிகத்தகுதியான ஒருவர் "வழக்கம்போல" விடுபட்டிருந்தார். அவர் வேறு யாருமல்ல மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்தான்.

எஸ்.பி.பி.க்கு பத்மபூஷண் அளிக்கப்பட்டிருப்பது சந்தோஷமானதுதான். மற்றபடி (பலருக்கு யாரென்றே தெரியாத இரண்டு பரதநாட்டியக்கலைஞர்கள் இருவர் உட்பட) பத்மஸ்ரீ பெற்றவர்களைப்பற்றியும் நாம் குறை சொல்வதற்கில்லை.

நம் கேள்வி, 'அவர்களுக்கு ஏன் கொடுத்தாய்?' என்பது அல்ல, 'இவருக்கு ஏன் தடுக்கிறாய்?' என்பதுதான். சென்ற ஆண்டு காங்கிரஸ் தலைவர் திரு தங்கபாலு பங்குபெற்ற ஒரு விழா மேடையில் அவரிடமே இதுபற்றி கோரிக்கைவைத்தார் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.

அவர் உச்சத்தில் இருந்தபோதே கொடுத்திருக்க வேண்டியது, இன்னும் அவருக்கு எட்டாமலே இருக்கிறது. ஏற்கெனவே அவர் தனது 83-வது வயதில் பயணித்துக்கொண்டு இருக்கிறார். இனிமேலா அவரை கணக்கில் எடுத்துக்கொள்ளப்போகிறார்கள்?.

மறைந்த முதல்வர், முன்னாள் முதல்வர், இந்நாள் முதல்வர் என எல்லா முதல்வர்களுடனும் தொடர்பிருந்தும் ஒரு மாபெரும் கலைஞர் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறார்.

ஒருவேளை, ஒரே ஒரு முறை எம்.எஸ்.வி.க்கு பத்மபூஷணோ அல்லது பத்மஸ்ரீயோ வழங்கி அப்படியே விட்டுவிடுவதைவிட, வருஷாவருஷம் அவருக்கு 'பத்ம-நாமம்' வழங்கிக்கொண்டே இருக்கலாம் என்று முடிவெடுத்து விட்டதோ இந்திய அரசு?.