ஸ்வப்னம் - ஏழிசையாய்..

ஆரம்ப இசை. ஒரு பறக்கும் தட்டில் உட்காரவைத்து நம்மையெல்லாம் வனங்கள், பசுமை வயல்கள், அருவிகள், நீரோடைகள், கார் மேகங்கள் வழி அழைத்துச் சென்று மார்கழித் திங்களின் ஒரு காலைப் பொழுதில் தேவார இசை பாடும் திருவாரூர் திருக்கோயிலின் உள்வளாகத்தில் இறக்கிவிடுகிறார் இசை ஞானி.


ஏழாம் திருமுறை: பாடல் எண்:10 தலம் : திரு ஆரூர். பண் : பழம் பஞ்சுரம்
-------------------------------------------------------------------------

ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய்
என்னுடைய தோழனுமாய்
யான்செய்யுந் துரிசுகளுக் குடனாகி
மாழையொண்கண் பரவையைத் தந்தாண்டானை
மதியில்லா ஏழையேன் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே.

பொழிப்புரை :

ஏழிசைகளைப் போன்றும், அவ்விசைகளின் பயனாகிய பண்களைப் போன்றும், இனிய அமுதத்தைப்போன்றும் இன்பத்தைத் தந்து, அதன்மேல் என்னுடைய தோழனும் ஆகி, யான் செய்யும் குற்றங்களுக்கு உடன்பட்டு, மாவடுவின் வகிர்போலும், ஒளி பொருந்திய கண்களையுடைய பரவையை எனக்கு ஈந்து என்னை அடிமைகொண்டவனாகிய எனது திருவாரூர் இறைவனை, அறி வில்லாத எளியேன் பிரிந்து இவ்விடத்திற்றானே இருப்பேனோ ! இரேன் ; விரையச் சென்று அவனை வணங்குவேன்.


"ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய்" என்ற மூன்று சொற்களைத் தாண்டிபோவதற்குள்ளாகவே ஒரு அழகான இசையோவியத்தை கண்முண்ணே வரைந்துவிடுகிறார் ராஜா. வீணையும், புல்லாங்குழலும் போட்டிப் போட்டுக்கொண்டு இந்த வரிகளோடு உரையாடுவது சிறப்பு. அதுபோலவே அடுத்த "யான்செய்யுந் துரிசுகளுக் குடனாகி" சொற்களின் வரிசைகளுக்கு மிருதங்கம், கஞ்சிரா, மோர்சிங், கடம்-களுக்கு இடையே ஒரு தனிஆவர்த்தனம் வைத்து தலைவாழை விருந்து படைந்திருக்கிறார் ராஜா. "மதியில்லா ஏழையேன் பிரிந்திருக்கேன்" என அபிஷேக் ரகுராம் உயரே சென்று "என்ஆரூர் இறைவனையே" என இறைவனின் முன்பு சரணாகதி அடையும்வரை கூடவே மிருதங்கம் பலதடங்களில் குரலுக்கு இணையான வேகத்தில் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டே வருகிறது.

ஒரு தேவாரப் பாடலுக்கு மேற்கத்திய செவ்விசையையும், நமது பாரம்பர்ய இசையையும் இணைத்து விஸ்வரூப இசைவடிவம் கொடுத்திக்கிறார் ராஜா. அதையும் மேற்கத்திய செவ்விசை அமைப்பில் அமைந்த ஆரம்ப இசையிலேயே "ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய்" என்ற ஒலிக்கப் போகும் பாடலின் ராக அமைப்பை அதன் சாரம்சத்தை விவரித்துக் காட்டுவது ராஜாவுக்கே உரிய வியத்தகு யுத்தி. உருகிப் பாடியிருக்கும் அபிஷேக் ரகுராமிற்கு பாராட்டுக்கள்.

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்..
ஏழிசையாய் இசைப்பயனாய்
என்னுள் நிலைத்து நிற்கும் இளையராஜா !