Results 1 to 10 of 3997

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19

Hybrid View

  1. #1
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    290
    Post Thanks / Like
    சாதனைச்சக்ககரவர்த்தியின் 97 வது திரைக்காவியம்
    கை கொடுத்த தெய்வம் வெளிவந்து
    சாதனை நிகழ்த்திய நாள் இன்று

    கை கொடுத்த தெய்வம் (18.யூலை 1964)






    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கை கொடுத்த தெய்வம் (18.யூலை 1964)- A great Film by Iyakkunar thilagam K.S.G ,who started his Career as dialogue writer with Padikkatha methai.



    Murali's Great write-up on our next Epic Film.



    கை கொடுத்த தெய்வம்

    தயாரிப்பு: பொன்னி புரொடக்ஷன்ஸ்

    திரைக்கதை வசனம்: கே.எஸ். ஜி.

    இயக்கம் : கே.எஸ்.ஜி.

    வெளியான நாள்: 18 07.1964

    அமிர்தசரஸ் நகரம். ரயிலிருந்து இறங்கும் இளைஞன் ரவி வேலை தேடி அலைந்து ஒரு பார்க்கில் மயங்கி விழுகிறான். அவனை தன் அறைக்கு கொண்டு வந்து உணவு கொடுத்து காப்பாற்றுகிறான் ரகு. தற்கொலை எண்ணத்தோடு வந்த ரவி, ரகு காட்டும் அன்பிற்கு கட்டுப்படுகிறான். தனக்கு கிடைத்த மானேஜர் வேலையை ரகு, ரவிக்கு விட்டுக் கொடுக்கிறான். தன்னைப் பற்றி எதுவும் சொல்ல மறுக்கும ரவி, ரகுவின் பெற்றோர்கள் ஊரில் கஷ்டப்படுவதை அறிந்து அவர்களுக்கு பணம் அனுப்புகிறான். இது அவர்களுக்கிடையே உள்ள அன்பை வலுவாக்கிறது. இருவரும் ஒரே அலுவலுகத்தில் பணி புரிகிறார்கள். ரவி மானேஜர், ரகு பியூன்.

    மற்றொரு கதைக் களம் சென்னை. பெரிய செல்வந்தர் மகாதேவன். அவருக்கு இரண்டு மகள்கள். ஒரு மகன். மூத்த மகள் கோகிலா. இளைய மகள் சகுந்தலா. மூத்த மகள் கோகிலா வெறும் அப்பாவி. வெளுத்ததெல்லாம் பால் என நினைப்பவள். இரக்க குணம் அதிகம். வரதன் என்ற அயோக்கியனுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் மாட்டிக் கொள்கிறாள்.

    அவள் பண உதவி செய்யாவிட்டால் தற்கொலை செய்துக் கொள்ள போவதாக மிரட்டியே அவளை தினமும் சந்தித்து பணம் வாங்குகிறான். இதை பார்க்கும் ஊர் மக்கள் அவளை தவறாக பேசுகிறார்கள். தன் பங்கிற்கு அந்த வரதனும் தனக்கும் கோகிலாவிற்கும் தொடர்பு இருப்பதாக செய்தி பரப்புகிறான். அவளின் கல்யாண ஏற்பாடுகளை தடுக்கும் விதமாக பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை வீட்டாருக்கு மொட்டை கடுதாசி எழுதுவதிலிருந்து அவர்களை சந்தித்து அவதூறு பரப்புவதையும் வாடிக்கையாக வைத்துள்ளான். அவன் ஒரு பிக் பாக்கெட் கும்பலுக்கு தலைவனாக இருக்கிறான்.

    ஊரார் பேசும் அவதூறு, அதன் காரணமாக நடக்காமல் போகும் கல்யாணம் இவையெல்லாம் அவளது தந்தையை மனமொடியச் செய்கிறது. இந்த அவமானம் தாங்காமல் கோகிலாவின் அண்ணன் ஊரை விட்டே ஓடிப போய் விடுகிறான். அந்த குடும்பத்திற்கு நெருக்கமான வக்கீல் மட்டுமே அவர்களுக்கு ஆறுதலாக இருக்கிறார் .

    அங்கே அமிர்தசரசில் அலுவலகத்தில் வேலை பார்க்கும் டைப்பிஸ்டும் ரவியும் ஒருவரை ஒருவர் விரும்பிகின்றனர் என்பதை அறியும் ரகு அவர்களது திருமணத்தை நடத்தி வைக்கிறான். திருமணத்திற்கு பின்னும் ரகுவும் ரவியும் ஒரே வீட்டிலேயே சேர்ந்து வாழ்வது பற்றி அலுவலகத்தில் சிலர் தவறாக பேச அவர்களுடன் ரகு சண்டைக்கு போகிறான். ஒரு கட்டத்தில் இது அதிகமாகவே வீட்டை விட்டு வெளியேற முடிவெடுக்கும் ரகுவை ரவி தடுக்கிறான். ஊரார் பேச்சுக்கெல்லாம் பயந்து நமது வாழ்க்கையை நாம் நாசப்படுத்திக் கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்துகிறான். அவன் அன்புக்கு கட்டுப்பட்டு ரகு அந்த வீட்டிலேயே தங்குகிறான்.

    சென்னையில் மகாதேவனின் குடும்ப வக்கீல் ஒரு ஏழைக் குடும்பத்திற்காக வாதாடி அவர்களது சொத்தை மீட்டுக் கொடுக்கின்றார். எந்த வரனும் ஒத்து வராத நிலையில் மனம் உடைந்து நிற்கும் மகாதேவனுக்கு உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. அவரைப் பார்க்க வரும் வக்கீலுக்கு தான் கேஸ் ஜெயித்துக் கொடுத்த பெற்றோர்கள் தங்களின் ஒரே மகனுக்கு கல்யாணத்திற்கு பெண் இருந்தால் சொல்லும்படி சொன்னது நினைவுக்கு வருகிறது. அவர்களை தொடர்பு கொள்கிறார்.

    அமிர்தசரசில் ரகுவிற்கு கல்யாணத்திற்கு பெண் பார்க்க வரும்படி கடிதம் வருகிறது. ரவி அலுவலக வேலை காரணமாக வர முடியாத சூழ்நிலையைச் சொல்ல, பெண் பார்த்து விட்டு பெண்ணின் புகைப்படத்தை அனுப்புவதாக சொல்லி விட்டு ரகு கிளம்பிச் செல்கிறான்.

    சென்னையில் ரகு பயணம் செய்யும் கார் ரிப்பேராகி விட அந்த வழியாக வரும் கோகிலா தன் காரில் ரகுவிற்கு லிப்ட் கொடுக்கிறாள். முன் பின் தெரியாத அவனிடம் தன் மொத்த கதையையும் அவள் கூற, ரகு அவளை நன்கு புரிந்துக் கொள்கிறான். மறுநாள் பெண் பார்க்க செல்லும் ரகுவைப் பார்த்து கோகிலாவும் கோகிலாவைப் பார்த்து ரகுவும் சந்தோஷ அதிர்ச்சி அடைகிறார்கள். கலயாணத்திற்கு முழு சம்மதம் தெரிவிக்கும் ரகு கோகிலாவின் போஃட்டோவை வாங்கி ரவிக்கு அனுப்புகிறான். மகாதேவன் குடுமபத்திற்கு மிகப் பெரிய சந்தோஷம்.

    புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறான் ரவி. இந்த பெண் உனக்கு ஏற்றவள் அல்ல என்று பதில் எழுதி விடுகிறான். அதை பார்த்து துடித்துப போகும் ரகு, கோகிலா வீட்டிற்கு கடிதத்தோடு வருகிறான். அங்கே சகுந்தலாவை பார்த்து விஷயத்தைச் சொல்ல அவள் அதிர்ந்து போகிறாள். கடிதத்தை படித்து பார்க்கும் அவளுக்கு அது தன் அண்ணன் எழுதிய கடிதம் எனப் புரிகிறது. இப்போது இந்த விஷயத்தை சொன்னால் தன் தந்தையால் அதை தாங்கிக் கொள்ள முடியாது என்றும் நேரம் வரும் போது தானே சொல்வதாகவும் சொல்லி கடிதத்தை வாங்கி கொண்டு ரகுவை அனுப்பி விடுகிறாள். தன் அண்ணனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறாள்.

    மீண்டும் அமிர்தசரஸ் செல்லும் ரகு கையில் அந்தக் கடிதம் கிடைக்கிறது. அதை படித்து பார்த்து உண்மையை தெரிந்துக் கொள்ளும் ரகு, ரவியிடம் கேட்க, கோகிலா தன் தங்கைதான் என ஒப்புக் கொள்கிறான் ரவி. என்னை பற்றி அவதூறு பேச்சு வந்த போது எனக்கு அவ்வளவு அறிவுரை சொன்னாயே, இப்போது உன் தங்கையைப் பற்றியே இப்படி பேசுகிறாயே என்று ரகு கேட்க அதற்கு ரவி, என் தங்கை நல்லவளா கெட்டவளா என்று எனக்கு தெரியாது. ஆனாலும் தெரிந்தோ தெரியாமலோ அவப் பெயர் சுமக்க நேர்ந்த அவள் உனக்கு வேண்டாம், என் நண்பனுக்கு வேண்டாம் என்பதால் தான் அப்படி சொன்னேன் என்கிறான். அவனின் நட்பை எண்ணி பெருமைப்படும் ரகு தான் செய்ய வேண்டியதை முடிவு செய்து சென்னைக்கு செல்கிறான்.

    அங்கே கல்யாண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. எப்படி சொல்வது என்று தெரியாமல் சகுந்தலா தடுமாறிக் கொண்டிருக்க அவள் ஒளித்து வைத்த ரவியின் கடிதம் அவளது தந்தையின் கையில் சிக்கி விடுகிறது. தன் மகனே இந்த கல்யாணத்தை நிறுத்தி விட்டான் என்பது தெரிந்ததும் இடிந்து போகும் மகாதேவன் அந்த கோபத்தை எல்லாம் கோகிலாவிடம் கொட்ட அந்த நேரம் ரகு அங்கே வந்து கோகிலாவை தான் ஏற்றுக் கொள்வதாக சொல்கிறான். அனைவரும் மகிழ்கிறார்கள்.

    ஆனால் முடிவு?


    இந்தப் படத்தை பொறுத்த வரை நடிப்புக்கென்றே எடுத்த படம் எனச் சொல்லலாம். இரு திலகங்களின் அபார நடிப்பு வெளிப்பட்ட படம் இது.

    நடிகர் திலகத்தை பொறுத்த வரை மிக மிக இயல்பாக அதே சமயம் அவரின் ஒவ்வொரு உணர்வும் ஆழமாக பார்வையாளன் மனதில் பதியும் வண்ணம் நடித்திருப்பார். முதல் காட்சியில் மயங்கி கிடக்கும் எஸ்.எஸ்.ஆரை தூக்கிக் கொண்டு வைத்து அவரை உபசரிக்கும் இடத்திலிருந்து இறுதிக்காட்சியில் சாவித்திரியின் சோக முடிவை சொல்லி கலங்குவது வரை - டாப்.

    அறிமுக காட்சியில் தனக்கே உரிய பாணியில் ஸ்டைலாக சிகரெட் பிடித்துக் கொண்டே எஸ்.எஸ்.ஆரை விசாரிக்கும் காட்சியே களை கட்டி விடும். வாசலில் போஸ்ட் குரல் கேட்கிறது.[அனேகமாக அதிகமாக போஸ்ட் என்ற குரல் கேட்டது இந்த படத்தில் தான் இருக்கும்]. லெட்டரை பிரிக்கிறார். படிக்கிறார். முகம் மாறுகிறது. கண்ணை மூடி திறக்கிறார். கண்ணில் நீர் கட்டி நிற்கிறது. [அவருக்கு தான் அது "கண்" வந்த கலையாயிற்றே]. என்னவென்று கேட்கும் நண்பனிடம், அப்பாக்கு உடம்பு சரியில்லையாம் ஆயிரம் ரூபாய் பணம் வேணும்னு அம்மா லெட்டர் போட்டுருகாங்க. நம்மாலே பணம் அனுப்ப முடியாது,ரெண்டு சொட்டு கண்ணீர் தான் விட முடியும். அந்த கடமையை செஞ்சாச்சு. நீ போய் ஷேவ் பண்ணு என்று சொல்லும் போது அந்த பாத்திரத்தின் உணர்வோடு நாமும் இணைந்து போவோம். நண்பன் தன் நிலை புரிந்து ஊருக்கு பணம் அனுப்பி வைத்தான் என்று தெரிந்ததும் அதிக வசனங்கள் இல்லாமல் அந்த நன்றியை கண்களில் சொல்வதும் அவரால் மட்டுமே முடிந்த ஒன்று.

    தமிழ்நாட்டு சாப்பாடுக்கு அவர் ஏங்கும் ஏக்கம், அலுவலகத்தில் ஒரு பெண் சாப்பிடும் சாதத்தையும் குழம்பையும் அவ்வளவு ஏக்கத்துடன் பார்ப்பது, எப்போதும் சப்பாத்தி சாப்பிட்டு வெறுத்து போயிருக்கும் நேரத்தில் நண்பனுக்கு திருமணம் ஆக, அவன் மனைவியாவது நன்றாக சமைத்து போடுவாள் என ஆசையோடு காத்திருக்கும் போது அவளும் சப்பாத்தி செய்துக் கொண்டு வைக்க அவர் முகம் மாறும் பாவம் இருக்கிறதே, பிரமாதம். பிறகு தானே சமையல் அந்த பெண்ணிற்கு சொல்லிக் கொடுப்பதும் [அரிசியிலே கல்லை களையணும். அரிசியை களைஞ்சிரக் கூடாது] இருந்தாலும் என்னவோ குறைகிறதே என்று யோசித்து கணவன் புடவை கட்டி விட, இவர் தலை வாரி பூ சூட்டுவதும் ரசிக்க தகுந்த காட்சிகள். தன் தங்கையாய் பாவிக்கும் நண்பனின் மனைவியையும் தன்னையும் தியேட்டரிலும் அலுவலகத்திலும் அவதூறு பேசும் ஆட்களை அடித்து துவைப்பது ஆவேசம் என்றால் அதன் காரணமாக வீட்டை விட்டு வெளியேறும் தன்னை உன் மேலயே உனக்கு நம்பிக்கை இல்லை. அதனாலே தான் வெளியே போறே என்று சொல்லும் நண்பனை சட்டையை பிடித்து உலுக்கும் உக்கிரம் அதே நேரத்தில் அவன் வார்த்தைகளில் இருக்கும் உண்மையை உணர்ந்து உடைந்து அழுவது எல்லாமே டாப்.

    இப்படி கலகலப்பாக இருக்கும் அவர் சென்னைக்கு சென்றவுடன் சாவித்திரியைப் பார்த்தவுடன் அவர் பேச்சைக் கேட்டவுடன் அவர் பாத்திரத்திற்கு ஒரு சீரியஸ்னெஸ் வருவதோடு அந்த பெண்ணின் மேல் உருவாகும் இரக்கத்தையும் முகபாவத்திலேயே வெளிப்படுத்தியிருப்பார். பெண் பார்க்க போகும் இடத்தில் எதிர்பாராமல் சாவித்திரி தான் பெண் என்று தெரிந்தவுடன் அவருக்குள் ஏற்படும் பலவேறு உணர்வுகளை அழகாக செய்திருப்பார். நண்பனுக்கு காண்பிக்க போஃட்டோ வேண்டும் என்று வெட்கத்துடன் கேட்பதாகட்டும், பதில் வரவில்லையே என்று தவிப்பதாகட்டும், கடிதம் வந்தவுடன் அந்த முகத்தில் வரும் சந்தோஷம் ["நான் சொன்னேன்லே கரெக்டா பதில் போட்டுட்டான் பாரு"], கடிதத்தை பிரித்துப் படிக்க ஆரம்பிக்க அந்த குரலில் ஏற்படும் தடுமாற்றம், அந்த பெண் உனக்கு ஏற்றவள் அல்ல எனபதை படித்து விட்டு இடிந்து போவது, தன் நிலையை எப்படிச் சொல்வது என்று தெரியாமல் புஷ்பலதாவிடம் வார்த்தை வராமல் தவிப்பது, தன் வீட்டிற்கு வந்து பெண்ணை குறை சொல்லும் ராதாவை கன்னத்தில் ஒரு அறை கொடுத்து ஊர்காரர்களை சத்தம் போடுவது, இறுதியில் சாவித்திரியை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கை கூடாமல் போய் விட, அவளின் உயர்வுகள் பற்றி குமுறி பேசுவது இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு சில படங்களில் ஆரம்பம் முதல் முடிவு வரை நடிகர் திலகத்தின் சிறப்பான நடிப்பை பற்றி சொல்ல வேண்டி வரும். அப்படிப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.

    நடிகையர் திலகம் சாவித்திரி படத்தின் நாயகி. மொத்தம் ஒரு எட்டு அல்லது பத்து காட்சிகளில் தான் வருவார். ஆனால் அனாயசமாக செய்திருப்பார். இரு திலகங்களும் இணைந்து நடித்த படங்களில் பாசமலருக்கு பின் மிக சிறந்த படம் கை கொடுத்த தெய்வம். அந்த உடல் வளர்ந்த ஆனால் குழந்தை மனம் படைத்த கோகிலா பாத்திரத்தை வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியாது. ஒவ்வொரு முறையும் தங்கை தன் நடவடிக்கைகளைப் பற்றி ஏதாவது சொல்ல, அவர் அதற்கு கொடுக்கும் பதில், அப்பாவின் மேல் வைத்திருக்கும் பாசம், ராதாவிடம் முதலில் காட்டும் இரக்கம், பிறகு பயம் மற்றும் கோபம்,சிவாஜியை முதலில் பார்க்கும் போதே தன் கதை முழுக்க சொல்லும் அப்பாவித்தனம், முதல் நாள் பார்த்த சிவாஜியே மறு நாள் பெண் பார்க்க வர, ஓடி வந்து சேரை இழுத்துப் போட்டு பக்கத்தில் உட்கார்ந்து "ஆமா, நேத்து அப்புறம் உங்க பிஃரண்டை பார்த்திங்களா" என்று காஷுவலாக விசாரிப்பது, இறுதியில் தந்தையே தன்னை கடுமையாக திட்டி விட மனம் உடைந்து தூக்க மாத்திரை சாப்பிட்டதை சொல்வது - நடிகையர் திலகம் பின்னியிருப்பார் நடிப்பில்.

    இந்த படத்தின் மிக பெரிய ஆச்சரியம் எஸ்.எஸ்.ஆர். வழக்கமான தன் பாணியை விட்டு விட்டு வெகு இயல்பாக செய்திருப்பார். சிவாஜியும் அவரும் இணைந்து வரும் எல்லாக் காட்சிகளுமே நன்றாக மிளிரும். பல்வேறு உணர்வுகளையும் வெளிப்படுத்தியிருக்கும் விதத்தில் அவரது அனுபவம் பளிச்சிடும். குறிப்பாக வீட்டை விட்டு வெளியே போகிறேன் என்று சொல்லும் சிவாஜியிடம் உன் மேலயே உனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லுவது, கோபப்பட்டு தன் கழுத்தை நெரிக்கும் சிவாஜியிடம் நீ வீட்டை விட்டு வெளியே போறேன்னு சொன்னா, நான் அப்படிதாண்டா சொல்லுவேன் என்று அசராமல் சொல்லும் இடம் எல்லாம் பிரமாதம். ஆனால் இவ்வளவு நன்றாக செய்து விட்டு அதற்கு ஒரு திருஷ்டி பரிகாரம் போல ஆயிரத்தில் ஒருத்தியம்மா பாடலின் போது நண்பனுக்கு கடிதம் எழுதுறேன் பேர்வழி என்று அவர் காட்டும் அபிநயம் இருக்கிறதே! -----

    கே.ஆர்.விஜயா மராத்தி பெண்ணாக வந்து தமிழ் பெண்ணாக மாறும் ரோல். நடிப்பை கொடுப்பதற்கும் ஒன்றுமில்லை. கெடுப்பதற்கும் ஒன்றுமில்லை. புஷ்பலதா சாவித்திரியின் தங்கை சகுந்தலாவாக ஒரு perptual சோகத்தோடு காட்சியளிக்க வேண்டிய பாத்திரம். குறை சொல்ல முடியாது.

    ரங்காராவ் - கோகிலாவின் அப்பா. அவர் எப்போது சோடை போனார் இதில் போவதற்கு? சமூத்தினால் வீண் அவதூறு பரப்பப்படும் ஒரு பெண்ணின் தந்தையை அப்படியே கொண்டு வந்து நிறுத்தியிருப்பார். எம்.ஆர்.ராதா - வில்லன் வரதன். அவருக்கு பெரிய அளவில் பேசும்படியான பாத்திரம் இல்லை. குறிப்பிடத் தகுந்த இன்னொருவர் வக்கீலாக வரும் சகஸ்ரநாமம். கர்நாடக சங்கீதத்தை ஹம்மிங் செய்தபடியே அவர் ஒவ்வொரு விஷயத்தையும் டீல் செய்வதே அழகு.

    கே.எஸ்.ஜியின் படங்களிலே, மிகச் சிறந்த படம் இதுவென்றால் மிகையாகாது. சென்னையிலும் அமிர்தசரசிலும் நடக்கும் கதைகளை அழகாக எந்த நெருடலும் இல்லாமல் இணைப்பதை செவ்வனே செய்திருப்பார். சாதாரணமாக பக்கம் பக்கமாக வசனம் எழுதும் கே.எஸ்.ஜி. இதில் முற்றிலும் மாறுபட்டு இயல்பான வசனங்களை எழுதியிருப்பார். சிவாஜி முதலில் எஸ்.எஸ்.ஆரை தன் வீட்டிலேயே தங்குமாறு சொல்லும் போது வரும் வசனங்கள் அதற்கு சாட்சி. "சில பேருக்கு கூட்டம் பாரமா இருக்கலாம்.ஆனால் எனக்கு தனிமை பாரமாக இருக்கு" என்று சிவாஜி சொல்ல "உங்கள் அன்புக்கு கட்டுபடறேன். ஆனால் வார்த்தைக்கு கட்டுப்பட முடியவில்லை" என்று சொல்லும் எஸ்.எஸ்.ஆர். இது போல் சில பல நல்ல வசனங்கள் படம் முழுதும் தூவி விடப்பட்டிருக்கும். இப்படி பட்ட ஸ்டார் காஸ்ட் அமைந்து விட்ட பிறகு இயக்குனர் வேலை வெகு சுலபம். நடிகர் திலகத்தை வைத்து கே.எஸ்.ஜி. இயக்கிய முதன் முதல் படமே மறக்க முடியாத படமாக அமைந்தது தனிச் சிறப்பு. குறிப்பிடத் தகுந்த மற்றொரு விஷயம் நகைச்சுவை படத்திற்கு வெகு முக்கியம் என்று கருதப்பட்ட காலத்தில் காமடி டிராக் இல்லாமலே காமடி நடிகர்கள் இல்லாமலே படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்லலாம் என்பதை உணர்த்தியிருப்பார்கள்.

    கர்ணன் காமிரா. ஆனால் கண்ணை உறுத்தும் angle-கள் இல்லாத சீரான ஒளிப்பதிவு. இசையைப் பொறுத்தவரை நான்கே பாடல்கள். ஆனால் நான்கும் வெகு பிரபலமான பாடல்கள்

    1. குலுங்க குலுங்க சிரிக்கும் சிரிப்பில் இவள் ஒரு பாப்பா- சாவித்திரி தோழி பெண்களோடு கடற்கரையில் பாடும் பாடல்.

    2. சிந்து நதியின் மிசை நிலவினிலே- மகாகவியின் மறக்க முடியாத பாடல். சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து என்ற வரிகளுக்கேற்ப இரண்டு சரணங்களுக்கிடையே தெலுகு வரிகள் மனதை வருடும் மெட்டில் அமைக்கப்பட்ட விதத்திற்காகவே மெல்லிசை மன்னர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆலப்புழையின் காயலில் [Back Waters] ஓடும் படகு பாட்டிற்கு மேலும் அழகை கொடுக்கும். அது மட்டுமா? மீசையும் தலைப்பாகை கட்டும் உள்ள முகம் மட்டுமே பெரும்பாலும் தெரியும் க்ளோஸ் அப் காட்சிகள் உள்ள இந்த பாடல் பாரதியை இன்றைக்கும் தமிழ் நாட்டிற்கு நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் ஒன்றல்லவா.

    மேலும் கங்கை நதி தீரத்திலும் காவிரி நதி ஓரத்திலும் வாழும் விவசாயிகளை அவர்களின் பாரம்பரிய உடையோடு காண்பித்ததோடு மட்டுமல்லாமல் சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று வீர முழக்கமிட்ட சிங்க மராட்டிய திலகரை அந்த ஒரு கணத்தில் நடிகர் திலகம் நமக்கு அறிமுகப்படுத்தினாரே அது என்றும் மனதில் நிற்கும் காட்சியல்லவா. யானை தந்தம் தரும் நம்பூதிரி மட்டும் என்ன குறைந்தவரா என்ன?. எப்படிப் பார்த்தாலும் மறக்க முடியாத பாடல் மற்றும் காட்சி.

    3. ஆஹா மங்கள மேளம் - நடிகர் திலகம் பெண் பார்க்க போகிறார் என்று தெரிந்ததும் விஜயா பாடும் பாடல். எஸ்.எஸ்.ஆர் சேலை கட்டி வருவார்(!)

    4. ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ - மற்றொரு காவியப் பாடல். பாடல் வரிகளில் கண்ணதாசனும், இசையில் மன்னர்களும், பாடுவதில் டி.எம்.எஸ்ஸும் நடிப்பதில் சிவாஜியும் பின்னியிருப்பார்கள். சாந்தியில் வரும் யார் அந்த நிலவு பாடலில் முகத்தை காட்டாமல் முதுகை காட்டி கைதட்டல் வாங்குவார் நடிகர் திலகம் என்று சொல்லுவார்கள். ஆனால் அந்த படம் வருவதற்கு முன்பே வெளியான இந்த படத்தின் இந்தப் பாடலில் இரண்டாவது சரணம் தொடங்கும் போது பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும் என்ற வரிகளுக்கு முதுகை மட்டும் காட்டியபடி தன் வலது கை விரல்களை மட்டும் உயர்த்தி கைதட்டல் வாங்கிய ஒரே நடிகன் நடிகர் திலகம் மட்டுமே.

    இப்படி எல்லாம் அமைந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பது சந்தோஷமான செய்தி. சென்னையில் வெளியான நான்கு தியேட்டர்களிலும் மதுரை கோவை முதலிய ஊர்களிலும் நூறு நாட்களைக் கடந்து ஓடியது இந்தப் படம்.

    அந்த ஆண்டைப் [1964] பொறுத்த வரை தான் எப்படிப்பட்ட படங்களில் நடிகர் திலகம் நடித்தார்? தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத படங்கள்.

    1. கர்ணன் - அதுவரை புராணத்தில் வில்லனாக இருந்த கர்ணன் நாயகனாக மாறினான். இன்று வரை அப்படியே நிலைக்கிறான்.

    2. பச்சை விளக்கு - ரயில் என்ஜின் டிரைவர். குடும்பத்திற்காக தன்னை அழித்துக் கொள்ளும் சாரதி.

    3. ஆண்டவன் கட்டளை - விவேகானந்தர் வழி நடந்தவர் சபலங்களினாலும் சலனங்களினாலும் திசை மாறி வாழ்வை கிட்டத்தட்ட தொலைத்து பின் மீண்டு எடுத்த கிருஷ்ணன்.

    4. கை கொடுத்த தெய்வம் - நட்புக்காக எதையும் செய்யும் இதயம் படைத்த ரகு.

    5. புதிய பறவை - வாழ்க்கையில் எல்லா விதமான வசதிகள் இருந்தும் ஒரு நிமிடம் உணர்ச்சி வசப்பட்டதால் நிம்மதியை இழந்து தவித்த கோபால்.

    6. முரடன் முத்து - கண் மூடித்தனமான பாசமும் முரட்டு சுபாவமும் கொண்ட முத்து.

    7.நவராத்திரி - ஒன்ற இரண்டா எடுத்து சொல்ல! நவரசமும் ஒன்று சேர்ந்து வந்த கொடையல்லவா இது!

    இப்படிப்பட்ட ஒரு வருடத்தில் வந்த இந்த படத்தைப் பற்றி பேச எழுத வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி.



    [/B]




    [/COLOR][/SIZE][/QUOTE]
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  4. Likes sivaa liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •