மாமியார் தேவை–200

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘‘மாமியார் தேவை’’ தொடர் 200 எபிசோடை எட்டியிருக்கிறது.

இளம் வயதில் மனைவியை இழந்த தொழில் அதிபர் கங்காதரனுக்கு மூன்று மகன்கள். முதல் இரு மகன்களும் தங்கள் மனைவிகளின் தூண்டுதலின் பேரில் அப்பாவிடம் சொத்தை பிரித்துக் கேட்கின்றனர். அதனால் தவித்துப்போகும் கங்காதரன், மூன்றாவது மகன்–மருமகள் சொன்ன யோசனையின் பேரில் துர்கா என்ற துணிச்சல் மிக்க பெண்ணை மறுமணம் செய்து கொள்கிறார். முதல் இரண்டு மகன்கள் கோபத்தோடும், முதல் இரண்டு மருமகள்கள் கொந்தளிப்போடும் இருக்கும் வீட்டில் துர்கா மாமியாராக வருகிறாள்.

மாமியாராக வந்த வேகத்தில் வீட்டில் பலப்பல கட்டுப்பாடுகளை போடும் துர்காவை துரத்தவேண்டும் என்று நான்கு பேரும் என்னென்னவோ திட்டம் போட, எல்லாமே தோற்றுப்போகிறது. முதல் மருமகள் நீலவேணியின் கோபக்கார சித்தி நாராயணி, துர்காவை அவமானமாக பேச, கங்காதரன் அவளை ‘‘வீட்டில் நுழையக்கூடாது’’ என்று துரத்துகிறார். அதனால் அவமானம் அடைந்த நாராயணி கங்காதரனின் சித்தப்பாவை திருமணம் செய்துகொண்டு, அதிகாரமாக கங்காதரன் வீட்டில் நுழைகிறாள். துர்காவை வேண்டும் என்றே அவமானப்படுத்த ஆரம்பிக்கிறாள்.

இதற்கிடையே தொழில் போட்டி காரணமாக கங்காதரனுக்கு எதிரியாக வரும் முனியன் – கங்காதரனின் முதல் மகன் பிரேமை மிரட்டி, வீட்டை விட்டு பிரிக்கிறான்.

அடுத்ததாக இரண்டாவது மகன் வசந்த்தை அவனது மனைவி கிரிஜாவிடம் இருந்து பிரிக்கிறான்.

மூன்றாவது மகன் தீபக்கையும் முனியன் ஏதாவது செய்துவிடப்போகிறான் என்று கங்காதரன் அச்சப்படும் நேரத்தில், மீரா வயிற்றில் உருவான கருவால் தான் பலப்பல பிரச்சினைகள் வருகிறது என்று நாராயணி குத்தலாக பேசுகிறாள். அதனால் யாருக்கும் தெரியாமல் கர்ப்பத்தை கலைக்கும் முடிவுக்கு வருகிறாள் மீரா.

அதே நேரத்தில் கங்காதரன் தன் சொத்தை மூன்று மகன்களுக்கும் ஒரு திட்டத்தோடு பிரித்து தர நினைக்கிறார். நாராயணியோ, கங்காதரனின் வீடு தன் பெயருக்கு மாற வேண்டும் என்று காய் நகர்த்துகிறாள்.

குடும்ப நலனுக்காக மீரா தன் கருவை கலைத்தாளா?

கங்காதரன் வீட்டை பறிக்க நாராயணியால் முடிந்ததா?

திரைக்கதை, வசனம்: பாபா கென்னடி; ஒளிப்பதிவு: அன்பரசன்; இயக்கம்: சுலைமான் கே.பாபு. இணை தயாரிப்பு: துர்கா தமிழ்மணி, போரூர் கே.எம்.கண்ணன்; தயாரிப்பு: தனுஷ் அஜெய்கிருஷ்ணா, ஐஸ்வர்யா அஜெய்கிருஷ்ணா.

நட்சத்திரங்கள்: சுபலேகா சுதாகர், யுவராணி, மகாலட்சுமி, குமரேசன், சுக்ரன், சோனியா, விஸ்வநாத், வந்தனா, சூசன், ரவி, அழகு, பத்மினி, மித்ரன், ஜி.கே.கலாதர், கே.நட்ராஜ்.