Results 1 to 10 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

Hybrid View

  1. #1
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    கவிஞனும் கண்ணனும்



    ''அபயம் அபயம் ..............கண்ணா வா!!''

    கதை வேறு பாட்டு வேறு. கதையையே பாட்டாகவும் சொல்லும் உத்தி பழைய செய்யுள்களில் நிறைய உண்டு. கம்ப ராமாயணம், வில்லி பாரதம் போன்றவையும், காப்பியங்களை புகட்டிய சிலப்பதிகாரம் போன்றவையும் உரைநடையில் இல்லை.

    அவற்றை ரசிக்கும்போது இரண்டு வித அனுபவம் பெற முடியும். கவிதையின் நடை, சந்தம், அதன் பொருள் செறிவு,, மாட்சிமை, ஒரு பக்கம் இருக்கட்டும் கதையையும் விறுவிறுப்பாக சொல்லும் பாங்கு அதோடு சேர்ந்திருந்தால் அதன் உன்னதமே தனி.

    ஒரே ஒரு பாட்டு கம்பரின் ராமாயணத்தில் சொல்கிறேன். பரதன் ராமனைத் தேடி கங்கைக் கரை வருகிறான். அவனோடு அயோத்தியில் அனைவரும் ரத கஜ துரக பதாதிகளோடு வருகிறார்கள். ஒருவேளை ராமனை திரும்ப அழைத்து வர முடிந்தால் ஒரு ராஜ மரியாதை வேண்டாமா ? அதற்காக.
    தூரத்தில் இந்த பரதனின் கூட்டத்தை குகன் எனும் வேடன் பார்த்து விடுகிறான். ராமனை கங்கைக்கரையில் சந்தித்து ''நால்வரோடு ஐவரானவன்'' அல்லவா? எதற்கு இந்த பரதன் படையோடு இங்கு வருகிறான்? ஒருவேளை நாட்டை விட்டு துரத்தியது போதாது, அவனை காட்டிலேயே கொன்று முடித்துவிடவும் எண்ணமோ?

    அப்படி ஒருவித எண்ணம் அவன் மனதில் இருந்தால் அவன் இன்றோடு முடிந்தான். வேடுவர்களாகிய நாங்கள் என் ராமனுக்கு தீங்கு செய்ய வந்த பரதனை உயிரோடு விட்டு வைப்போமா? என்று எண்ணி தனக்குத் தானே பேசுகிற மாதிரி ஒரு பாட்டு.


    ''கரிய நிறம் கொண்ட, என் ஆருயிர் நாயகனான, ராமன் அயோத்தி நகரை அரசனாக முடி சூட்டிக் கொண்டு ஆள முடியாதவாறு தாயைத் தூண்டிவிட்டு வஞ்சனை செய்து ராஜ்யத்தை பிடுங்கிக்கொண்ட இந்த பரதன் இதோ இங்கு வகையாக என்னிடம் மாட்டிக்கொண்டான். இவன் என்ன வெறும் படகோட்டிதானே என்று என்னைப் பற்றி நினைப்பா? எங்கள் அம்புகள் நெருப்பை உமிழ்ந்து கொண்டு அவன் படையையே அழிக்கும் என்று அறியாதவன்! வேடன் விட்ட அம்பு என்பதால் அரசன் நெஞ்சில் அது பாயாதா என்ன ?''''

    குகன் என்ற கதா பாத்ரம் சொல்வதாக இப்படி அமைந்த பாடல் எவ்வளவு நேர்த்தியாக வெண்பாவாக வந்திருக்கிறது பாருங்கள் சந்தத்தோடு கம்பருக்கு:

    அஞ்சன வண்ணன் என்னாருயிர் நாயகன் ஆளாமே
    வஞ்சனையா லரசெய்திய மன்னரும் வந்தாரே
    செஞ்சரமென்பன தீயுமிழ்கின்றன செல்லாவோ மன்னவர்
    நெஞ்சினில் வேடர் விடும் சரம் பாயாவோ?'''

    கம்ப ராமாயணத்தை விட இன்னும் எளிதில் எல்லோருக்கும் புரியும் தமிழில் பாடியவர் அமரகவி பாரதியார்.

    கண்ணனைக் காதலனாகவும் தன்னை அவன் காதலியாகவும் உருவகித்து ஒரு கதையாக சொல்கிறார்.

    அது ஒரு அடர்ந்த காடு, வடக்கா தெற்கா என்று புரியாத எங்கும் மரங்கள் அடர்ந்த பெருங்காடு.அங்கே கண்ணா உனைத் தேடி ஓடி வந்தேன்.ஆனால் எனக்கு எங்கு செல்வதென்றே தெரியவில்லை. சுற்றி சுற்றி வருகிறேன். களைப்பும், திகைப்பும் தான் மிச்சம். இளைத்தே போனேனடா.!
    என்னைச் சுற்றிலும் எத்தனையோ வித மரங்கள், அண்ணாந்து பார்க்கவே வேண்டாம். கண்ணெதிரே கைக்கெட்டிய வாறே வித வித கனிகள் தொங்குகின்றனவே. அடர்ந்த இந்த மரக்கூட்டத்தின் இடையே எங்கு நோக்கினும் உயர்ந்த மலைத்தொடர் பிரமிக்க வைக்கிறதே.

    அந்த உயர்ந்த மலைகளிருந்து வெள்ளிக்கம்பியாக நிறைய நீர் வீழ்சிகள், ஆறுகளாகவும், நதிகளாகவும் பெருகி கீழே ஓடுகிறதே.
    அது சரி நான் இதைத் தேடியா ஓடி வந்தேன், நீ எங்கே அதைச் சொல்?

    இந்த கனி தரும் மரங்கள் செடிகள், பூக்களையும் அவற்றின் மணத்தையும் அல்லவோ வாரி வழங்குகின்றன. நீர்ச் சுனைகள், புதர்கள், முட்கள்; இவையும் உண்டு. ஜாக்ரதையோடு நடந்து தான் உன்னை தேடுகிறேன் கண்ணா?

    இதோ பாரேன் இந்த மான்கள் கூட்டத்தை? என்னை ஆசையோடு பார்க்கின்றன. அவற்றின் விழியில் நீ தெரிகிறாய் கண்ணா, அவ்வளவு அழகு.

    இதென்ன, எங்கிருந்தோ ஒரு பயங்கர புலி உறுமல், நீ பயப்படாதே ஒன்றும் உனக்கு ஆகாது என்று இனிய நட்புக்குரலோடு ஒரு சில பறவைகள் பாடுகிறதும் அதே சமயம் கேட்கிறது.

    எனக்கொரு கவலையும் இல்லை என்ற பாணியில் ஒரு நீண்ட மழைப் பாம்பு வயிறு நிறைந்து படுத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு நான் இப்போது தேவையில்லை.

    ஏதோ அசைகிறதே தூரத்தில், என்று பார்த்தால் ஒரு பெரிய சிங்கம், சர்வ சுதந்திரத்தோடு பிடரியை அசைத்து கம்பீரமாக செல்கிறது. அதன் கர்ஜனை காடு முழுதும் எதிரொலிக்கிறது. அதன் சத்தம் யானைக் கூட்டத்தைக் கூட கதி கலங்க வைக்கிறது. அவை மிரண்டு அங்குமிங்கும் சிறு கண்களால் பார்க்கின்றன.

    சத்தம் வந்த திசைக்கு எதிர்பக்கம் தலை தெறிக்க மான்கள் ஓடுகிறதே. அதன் பயம் அதற்குத்தானே தெரியும்.

    ஒரு கெட்டிக்கார தவளை. இந்த கூட்டத்தில் நம்மை ஏதாவது மிதித்துவிடப்போகிறதே என்று ஒரு ஓரமாக பதுங்குகிறதே. அதிருக்கட்டும் என் கண்ணா நீ எங்கேடா?

    எவ்வளவு நேரமாக உன்னை தேடுகிறேன். என் காலும் கையும் சோர்த்து போய் விட்டதே. களைப்பு மீறி தூக்கமும் கண்களை சுற்றுகிறதே. கண்ணா, கண்ணா......

    இந்த நேரம் பார்த்து யார் இவன்?

    சிவந்த கண்களில் கொலை வெறி. கைகளில் கூர் ஈட்டி. காணாததைக் கண்டது போல் என்னை கண்கள் தெறித்து விழுகிறமாதிரி ஏன் பார்க்கிறான்.எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்கிறது.

    ''பெண்ணே, யாரடி நீ மோகினி? உன் அழகு என்னை பித்தனாக்கி விட்டதே. ஹா ஹா என்ற இடி இடிக்கிறமாதிரி ஒரு சிரிப்பு. ''அடி என் கண்ணே, என் கண் மணியே - உன்னை இருகைகளாலும் கட்டித் தழுவ என் மனம் விழைகிறதே.''

    ''ஏன் பெண்ணே, இப்படி சோர்ந்து படுத்திருக்கிறாய்? உனக்கு - நல்ல மான் மாமிசம் கொண்டுவருகிறேன். கறி சமைத்து நாம் இருவரும் தின்போமா? தேடித் பிடித்து அருமையான சுவை மிக்க பழங்களை உடனே கொண்டு வருவேன் - போதாததற்கு இந்த விருந்தைத் தொடர்ந்து நல்ல இனிய கள் கொண்டுவந்து விடுகிறேன். சேர்ந்து களிப்போம்.''

    ''கண்ணா, அந்த கொடிய சிவந்த விழி கொண்ட வேடன் இவ்வாறு என்னிடம் சொல்லும்போது என் காதில் பழுக்கக் காய்ச்சிய ஈயத்தை கொட்டியது போல் இருக்கிறதே . உயிரே போய்விடுமோ என்று இருக்கிறது.

    தன்னந்தனியே நான் ஒரு பெண், என்ன செய்ய முடியும்? இருகரமுங் குவித்து - அந்த முட்டாள் வேடனாகிய நீசனிடம் என்ன சொன்னேன் தெரியுமா ?

    ''கண்ணா, அவனை ''அண்ணா'' என்றேன்.

    அண்ணா, உன் காலடி டியில் வீழ்வேன் - எனை பயமுறுத்தாதே. கொடுமையான வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம். - நான் கண்ணனுக்குறியவள். அவனை எப்போதோ மணந்து விட்டேன். பிறன் மனைவியை கண்ணால் நோக்குவதும் கூட தவறல்லவோ?

    ''ஏய நிறுத்தடி உன் பேச்சை. சாத்திரங்கள் நீஎனக்கு சொல்ல வேண்டாம். எனக்கு நீ வேண்டும். உன்னிடம் நான் இன்பம் பெறவேண்டும். என் கனியே, - உன்னழகில் என்னை இழந்தேன். என் தலை நிறைய மொந்தை மொந்தையாக பழைய கள்ளை குடித்தால் ஏற்படும் போதையில் கிறுகிறுக்கிறது. உன் அழகு செய்யும் வேலை இது. வா பெண்ணே வா ''

    ''கண்ணா, அவன் சொன்ன வார்த்தையை கேட்டாயா?

    '' கண்ணா நீயே கதி'' என்று அலறி விழுந்தது தான் எனக்கு கடைசியாக ஞாபகமிருக்கிறது.

    மரக்கட்டைஆகி விட்டேனே.

    எவ்வளவு நேரம் இப்படி மயங்கி கிடந்தேன்? கொஞ்சம் கொஞ்சமாக நினைவு வந்தது. கண்ணை விழித்தேன்.

    ''ஆஹா கண்ணா? நீயா? அந்த கொடிய வேடன் எங்கே போனான்?

    ஒருவேளை என் குரல் கேட்டு நீ வந்த கணமே உன்னை எதிர்கொள்ள பயந்து அலறி அடித்துக்கொண்டு ஓடிவிட்டானோ. உன்னை ஆபத் பாந்தவன் அனாத ரக்ஷகன் என்று சொல்வது எவ்வளவு பொருத்தம்.

    என் அபயக் குரல் கேட்டு அபாயத்தில் இருந்து என்னைக் காப்பாற்ற வந்த கண்ணா நீ வாழ்க வாழ்க வாழ்க.!

    இந்த கதை எப்படி இருக்கிறது?. பாரதியின் இந்த கதைப் பாட்டை இனி படியுங்கள். தேனில் அமிர்தம் கலந்தால் எப்படியிருக்கும் என்று ருசிக்க ஒரு யோசனை சொல்லட்டுமா?

    மகாராஜபுரம் சந்தானம் அவர்கள் ராகமாலிகையில் இந்த பாட்டை பாடியிருக்கிறார் அதையும் ஒரு தரம் கேளுங்கள். இன்றைய பருப்பு விலை விருதுநகர் மார்க்கெட்டில் 130 வரை விற்கிறது ரேஷன் கடையில் கூட்டமில்லாமல் 5 கிலோ துவரம் பருப்பு உளுத்தம் பருப்பு தந்தாலும் அப்போது வேண்டாம் என்பீர்கள்.

    கண்ணன் - என் - காதலன்
    (காட்டிலே தேடுதல்)

    திக்குத் தெரியாத காட்டில் - உனைத்
    தேடித் தேடி இளைத்தேனே.

    1.
    மிக்க நலமுடைய மரங்கள், - பல
    விந்தைச் சுவையுடைய கனிகள், - எந்தப்
    பக்கத்தையும் மறைக்கும் வரைகள், - அங்கு
    பாடி நகர்ந்து வரு நதிகள், - ஒரு ... (திக்குத்)

    2.
    நெஞ்சிற் கனல்மணக்கும் பூக்கள், - எங்கும்
    நீளக் கிடக்குமலைக் கடல்கள் - மதி
    வஞ்சித் திடுமகழிச் சுனைகள், - முட்கள்
    மண்டித் துயர்பொடுக்கும் புதர்கள், - ஒரு ... (திக்குத்)

    3.
    ஆசை பெறவிழிக்கும் மான்கள், உள்ளம்
    அஞ்சக் குரல்பழகும் புலிகள், - நல்ல
    நேசக் கவிதைசொல்லும் பறவை, - அங்கு
    நீண்டே படுத்திருக்கும் பாம்பு, - ஒரு ... (திக்குத்)

    4.
    தன்னிச்சை கொண்டலையும் சிங்கம் - அதன்
    சத்தத் தினிற்கலங்கு யானை அதன்
    முன்னின் றோடுமிள மான்கள் - இவை
    முட்டா தயல்பதுங்குந் தவளை - ஒரு ... (திக்குத்)

    5.
    கால்கை சோர்ந்துவிழ லானேன் - இரு
    கண்ணும் துயில்படர லானேன் - ஒரு
    வேல்கைக் கொண்டுகொலைவேடன் - உள்ளம்
    வெட்கம் கொண்டொழிய விழித்தான் - ஒரு ... (திக்குத்)

    6.
    ''பெண்ணே உனதழகைக் கண்டு - மனம்
    பித்தங்கொள்ளு'' தென்று நகைத்தான் - ''அடி
    கண்ணே, எனதிருகண் மணியே - எனைக்
    கட்டித் தழுவமனம் கொண்டேன்.

    7.
    சோர்ந்தே படுத்திருக்க லாமோ? - நல்ல
    துண்டக் கறிசமைத்துத் தின்போம் - சுவை
    தேர்ந்தே கனிகள் கொண்டு வருவேன் - நல்ல
    தேங்கள் ளுண்டினிது களிப்போம்.''

    8.
    என்றே கொடியவிழி வேடன் - உயிர்
    இற்றுப் போகவிழித் துரைத்தான் - தனி
    நின்றே இருகரமுங் குவித்து - அந்த
    நீசன் முன்னர் இவை சொல்வேன்:

    9.
    ''அண்ணா உனதடியில் வீழ்வேன் - எனை
    அஞ்சக் கொடுமைசொல்ல வேண்டா - பிறன்
    கண்ணலஞ் செய்துவிட்ட பெண்ணே - என்றன்
    கண்ணற் பார்த்திடவுந் தகுமோ?''

    10.
    ''ஏடி, சாத்திரங்கள் வேண்டேன்: - நின
    தின்பம் வேண்டுமடி, கனியே, - நின்றன்
    மோடி கிறுக்குதடி தலையை, - நல்ல
    மொந்தைப் பழையகள்ளைப் போலே''

    11.
    காதா லிந்தவுதை கேட்டேன் - 'அட
    கண்ணா!' வென்றலறி வீழ்ந்தேன் - மிகப்
    போதாக வில்லையிதற் குள்ளே - என்றன்
    போதந் தெளியநினைக் கண்டேன்.

    12.
    கண்ணா! வேடனெங்கு போனான்? - உனைக்
    கண்டே யலறிவிழுந் தானோ? - மணி
    வண்ணா! என தபயக் குரலில் -எனை
    வாழ்விக்க வந்தஅருள் வாழி!

    http://www.musicindiaonline.com/p/x/...Jn9.As1NMvHdW/

    gkrishna

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •