சிவாஜி பாட்டு -36
--------------------------------

ரசிக்கத்தக்க நல்ல பாடல்கள், அழகான குழந்தைகளைப் போல.

எந்தக் குழந்தையும் "என்னைக் கொஞ்சு" என்று
விளம்பரப் பலகை வைத்துக் கொண்டு கெஞ்சுவதில்லை.

கொஞ்சத் தூண்டும் அதன் அழகே, 'வேறு வழியில்லை.. கொஞ்சியே ஆக வேண்டும்' என்கிற அந்த அழகின் கர்வமிகு நிலைப்பே நாம்
கொஞ்சுவதற்கான அழைப்பாகிறது.

இந்தப் பாடலும் ஓர் அழகான குழந்தை. நம் நினைவு வாசல்களில் ஆர்ப்பரித்து விளையாடும்
குழந்தை. குறும்பு மாறாத, துள்ளலும், வேகமும் மிகுந்த குழந்தை.

"கொஞ்சாமல் போய் விடு.. பார்ப்போம்" என்று
செல்லமாய் மிரட்டும் குழந்தை.
*****

"தன் நிழலையும்
தள்ளாட வைக்கிறான்...
குடிகாரன்"
- முன்பு நானெழுதிய கவிதை.

பெரிசாய் தாடி வளர்த்துக் கொண்டு, எந்நேரமும்
சோகித்துக் கொண்டு, எதையோ பறிகொடுத்தாற்
போல் எப்போதும் விட்டம் வெறித்துக் கொண்டு
இருப்பதற்காகத்தான் குடிக்கிறார்கள் என்று நான்
நினைத்திருந்தது இந்தப் பாடல் பார்த்து மாறியது.

உறவென்று யாருமற்ற வேதனையை, நல்லதெது,
கெட்டதெது என்று எடுத்துச் சொல்ல ஆளில்லாமல்
வளர்ந்த கொடுமையை, மதுப் புட்டி, லாரி, இரவு
ராணிக்காக தியாகித்த இரவுகள் என்று தன்னைச்
சுற்றி ஒரே மாதிரியாகச் சுழலும் உலகத்தினின்றும் தன்னைத் துண்டித்துக் கொள்ளவும், அதற்காக இனிமையாகத் தன்னை தண்டித்துக் கொள்ளவும் கூட குடிப்பார்கள் என்பது
இந்தப் படம் பார்த்து புரிந்தது.
*****

"ஒரு இளைஞன் குடித்திருக்கிறான். அத்துடன்
விடாமல் விலைமாது வீட்டுக்குப் போகிறான் .. ஆட்டம் போடுகிறான்" என்றொரு பாட்டுச் சூழலை
ஒரு இயக்குநர் சொல்லி, பெண்கள் மிகுதியாகப்
பார்க்கும் தன் படத்தில் அதை இடம் பெறச் செய்ய
ஒத்துக் கொண்டு, கொஞ்சமும் விரசமின்றி அதை
வெற்றியாக்கிச் சாதிக்க நடிகர் திலகமன்றி யார்
இங்கே?
*****

இசைக்கேற்றாற் போல் ஆடுவதும், பாடல் வரிகளுக்குச் சரியாக வாயசைப்பதும் மட்டுமே
போதும் என்று நாயகன் இருந்திருந்தால் இந்தப் பாடல் ஜெயித்திருக்காது.

அந்த அழகியோடு அங்கே பாடி, ஆடுவது சும்மா
ஒரு பொம்மையல்ல. உணர்வுகள் மிகுந்த ஒரு
உயிர்ப்பான மனிதன். தன்னுடைய வாழ்வின்
வெம்மைக்காக கவலை கொண்டு சோர்ந்து
போகாத, தன்னை நோக்கி வரும் இன்ப நிமிஷங்களை வீணாக்கப் பிரியமில்லாத புத்திசாலி. வாழ்வின் கோர முகங்களையும் சந்தித்து வந்த அனுபவசாலி. இரவில் விழித்து
ஆர்ப்பரிக்கும் ஒரு வீட்டுக்குள்ளிருந்து இந்த
அவல உலகை விமர்சிக்கும் தைரியசாலி.

சும்மா ஆடுகிற, பாடுகிற கதாநாயகன் இங்கே
தேவைப்படமாட்டான்.

அந்தப் பாடலில் நடிக்க ஒரு வேகம் வேண்டும்.

வாழ்க்கை மீதும், சக மனிதர்கள் மீதும் பெரிய
மரியாதை ஏதும் வைத்திராத ஒரு அலட்சியம்
அந்த முகத்தில் தெரிய வேண்டும்.

குடியும், காமமும் அப்படியொன்றும் தப்பில்லை
என்று சொல்ல வருகிற துணிச்சலைக் காட்ட வேண்டும்.

தனக்குப் பழக்கமான அவலமான வாழ்வை கிண்டலாகவும், கர்வமாகவும் ஆராயும் திறமை
காட்ட வேண்டும்.

ஒரு தேர்ந்த கஜல் பாடகனின் கையசைப்பு பாவனைகள்..

வாழ்வின் மீது எவ்வித மரியாதையும் இல்லாததை
உணர்த்தும் அந்தக் கர்வக் கண்கள்...

தன்னுடைய தீய பழக்கங்கள் குறித்து கவலைப்படாததைக் காட்டும் அந்த முகத்தின்
அலட்சியங்கள்...

துள்ளலான அந்த ஆட்டத்தின் மூலம் வெளிப்படுத்தும் ஒரு கதாபாத்திரத்தின் முழுமைத்
தன்மை ...

இவற்றை வைத்துக் கொண்டு நம்மை இந்தப்
பாடல் வழி வசீகரிக்க ஒரே ஒரு நடிகர் திலகம்
இருக்கிறாரே..?

அந்த நாயகனின் ரசிகரென்கிற பெருமை நம் ஆயுசுக்கும் வேண்டும்.